மும்பை, பிப்.6:  தோனியிடம் இருந்து நகர்ந்து, இனி இளம்வீரர்களுக்கே அதிக வாய்ப்பு வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஓய்வு முடிவு என்பது தோனியின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். ஆனால் தேர்வுக்குழு உறுப்பினர் பணியை ஓரங்கட்டி விட்டால், நானும் மற்றவர்களைப்போலவே தோனியின் மிகப்பெரிய ரசிகர் தான். தோனி தன் கிரிக்கெட் பயணத்தில் எட்டாத உச்சமில்லை. இரண்டு உலகக்கோப்பை, 1 சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்டில் நம்பர்-1 அணி என்ற அந்தஸ்து. அதனால் அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஒரு வீரராக ஓய்வு என்பது அவரின் தனிபட்ட முடிவு.

அதேசமயத்தில், ஒரு தேர்வுக்குழு உறுப்பினராக எங்களின் பணி என்பது அவரிடம் இருந்து நகர்ந்து அடுத்த தலைமுறை வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதுதான் என்றார். வரும் 2020 மற்றும் 2021 என அடுத்தடுத்து இரண்டு டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்கள் நடக்கவுள்ளதால், இளம் வீரர்களுக்கு அதிகமாக வாய்ப்பு வழங்கப்படும், என்றார்.

இதனிடையே, இம்மாத இறுதிக்குள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், புதிய தேர்வு குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.