சென்னை, பிப்.6:  அண்மையில் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படம் சம்பளம் தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் கிடைத்ததை அடுத்து நடிகர் விஜய்யிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினார்கள்.
அவருக்கு சொந்தமான பனையூர் பண்ணை வீடு, சாலிகிராமம் வீடு, நீலாங்கரை வீடு ஆகிய இடங்களிலும் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் இருந்து ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கும் நடிகர் விஜய்க்கும் இடையே சட்ட விரோதமாக நடைபெற்றுள்ள பணப்பரிமாற்றங்கள் குறித்தும் வருமான வரித்துறையினர் கிடுக்கிப்பிடி போட்டு விசாரணை செய்து வருகிறார்கள். நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான படம் ‘பிகில்’. இந்த திரைப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தின் 100-வது நாள் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நடைபெற்றது. இது தொடர்பாக இந்த படத்தின் முக்கிய தயாரிப்பு பணிகளை மேற்கொண்ட அர்ச்சனா கல்பாத்தி ஒரு டுவிட்டரை வெளியிட்டிருந்தார். வெறித்தனமான கொண்டாட்டம் என்றும், பிகில் ரூ.180 கோடி செலவில் உருவாக்கப்பட்டது என்றும் கூறியிருந்தார்.

பிகில் ரூ.300 கோடியை வசூல் செய்து சாதனை படைத்ததாக திரைப்பட வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னையில் உள்ள ஏஜிஎஸ் சினிமா தியேட்டர்கள், ஏஜிஎஸ் சினிமா தயாரிப்பு அலுவலகம், கல்பாத்தி அகோரம் வீடு என 35 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மதுரையைச் சேர்ந்த பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை, மதுரை வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அங்கு கணக்கில் வராத 65 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்க்கும், பைனான்சியர் அன்புச்செழியனுக்கும் இடையே சட்ட விரோத பணபரிமாற்றம் நடந்ததற்கான தஸ்தாவேஜ்களும் சிக்கியதாக தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் 2 மணியளவில் விஜய் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நெய்வேலிக்கு சென்றனர்.
நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு நெய்வேலி என்எல்சி. 2-வது சுரங்க பகுதியில் நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்க்கும் சம்மன் வழங்கினர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அவரை காருக்குள் அழைத்து வந்து வருமான வரித்துறையினர் விசாரிக்கத் தொடங்கினர். இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நடிகர் விஜய்க்கு அளிக்கப்பட்ட சம்பளம் தொடர்பான கணக்குகளில் மாறுபட்ட தகவல்கள் இருப்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அவரை மேலும் விசாரிப்பதற்காக படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜயை வருமான வரித்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

நடிகர் விஜய் பெற்ற தொகைக்கான வரியை செலுத்தினாரா என்பது குறித்தும் அவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். பனையூரில் உள்ள விஜய் பண்ணை வீட்டில் நடந்த இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் தஸ்தாவேஜ்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்யின் தந்தை வீட்டில் வருமான வரி துறை சோதனை மேற்கொண்டனர். இதேபோன்று நீலாங்கரையில் உள்ள மற்றொரு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சிறிது இடைவெளிக்கு பின்னர் நடிகர் விஜய் வீட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 3 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது மேலும் 4 அதிகாரிகள் விஜய் வீட்டுக்கு சென்றுள்ளனர். இந்த அதிரடி சோதனையை தொடர்ந்து விஜய் வீட்டை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் ஏழு பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

13 மணி நேரம் விசாரணை:
பிகில் பட சம்பளம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 13 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும் மற்றும் ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களிலும் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது