சென்னை, பிப்.6:  தர்பார் பட நஷ்டம் தொடர்பாக, விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து மிரட்டல் வருவதாக கூறி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு, அப்படத்தின் இயக்குநர் முருகதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பிப்ரவரி 10- ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி, சென்னை காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்தை வெளியிட்டதில் நஷ்டம் ஏற்பட்டதாக வினியோகிஸ்தர்கள் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் அலுவலகம் மற்றும் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு, வினியோகஸ்தர்கள் எனக் கூறிக்கொண்டு வந்த 25 அடையாளம் தெரியாத நபர்கள், அவருக்கு எதிராக கோஷம் எழுப்பி பிரச்சனை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தன்னுடைய வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், லைகா நிறுவனத்திற்காக தர்பார் படத்தில் தான் இயக்குனராக மட்டுமே பணியாற்றியுள்ளேன். படத்தின் திரையரங்கு உரிமை, சாட்டிலைட் உரிமை, விநியோக உரிமை போன்றவற்றில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. படத்தில் நஷ்டம் ஏற்பட்டது தொடர்பாக லைகா நிறுவனத்தை அணுகாமல், தன்னை மிரட்டுகின்றனர்.

இதுதொடர்பாக, சென்னை போலீஸ் கமிசனரிடம் புகார் செய்துள்ளேன். அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், இந்த சம்பவங்கள் இருவேறு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்துள்ளதால், இதுகுறித்து விளக்கம் பெற்று தெரிவிப்பதாக தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதி ராஜமாணிக்கம், மனுதாரரின் புகார் மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து பிப்ரவரி 10ம் தேதிக்குள் விளக்கமளிக்கும்படி, சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.