சென்னை, பிப்.6: குரூப்-4 தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இடைத்தரகர் ஜெயக்குமார் இன்று சைதை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

முகப்பேரை சேர்ந்த ஜெயக்குமார் குரூப்-4 தேர்வு முறைகேட்டிற்கு மூளையாக திகழ்ந்துள்ளார். இவரது வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி மேஜிக் பேனாக்கள் மற்றும் பென்டிரைவ்களை கைப்பற்றினர். இவரை பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் அவர் பதுங்கி இருக்கலாம் என்ற கிடைத்த தகவலை தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த மாநிலங்களுக்கு விரைந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் சைதாப்பேட்டையில் உள்ள 23-வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் இன்று சரணடைந்தார்.
உடனடியாக அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயக்குமாரை சிபிசிஐடி போலீசார் வலை வீசி தேடிவந்தனர். அவர் ஆந்திரா, கேரளா அல்லது தெலுங்கானா மாநிலத்தில் பதுங்கியிருக்கலாம் என்று கூறப்பட்டது. அவரைப்பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் சிபிசிஐடி போலீசார் அறிவித்திருந்தனர். தேர்வு எழுதியவர்கள் இவர் மூலமாகவே லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ஜெயக்குமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி சரணடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.