சென்னை, பிப்.6:  செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில் போடப்பட்டிருந்த சீலை உடைத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று சோதனை நடத்திவருகின்றனர். முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்பாலாஜி வீடுகளில் சிபிசிஐடி போலீசார் கடந்த வாரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னையிலிருந்து டிஎஸ்பி தலைமையில் இன்ஸ்பெக்டர் உட்பட 15-க்கும் மேற்பட்ட போலீசார், கரூர் அடுத்த மண்மங்கலம் அருகே உள்ள ராமேஸ்வரம்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜி வீடு மற்றும் கரூர் ராமகிருஷ்ணபுறத்திலுள்ள செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு மற்றும் டெக்ஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். அதிமுக அரசில் 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த« செந்தில்பாலாஜி. போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் ரூ.95 லட்சம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் இருந்தது. இந்த மோசடி குறித்து அம்பத்தூர் கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.
இதன்பேரில், நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். அதன்படி, மந்தைவெளியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு பூட்டு போடப்பட்டிருந்ததால், அந்த பூட்டை அகற்றிவிட்டு சீல் வைத்தனர்.

இந்த நிலையில், சோதனை நடத்துவதற்கான நீதிமன்ற அனுமதியுடன் இன்று காலை 10 மணியளவில் சென்னை மந்தைவெளியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார், சீலினை அகற்றி, வீட்டினுள் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். உதவி ஆணையர் ராமச்சந்திர மூர்த்தி தலைமையில் நடைபெறக்கூடிய இந்த சோதனையில் 5-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் உடன் இருப்பதாக கூறப்படுகிறது. சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.