சென்னை, பிப்.10: பிகில் பட வசூல் எவ்வளவு, நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு என்பது தொடர்பாக வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து நடிகர் விஜய், படத் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் அதிபர் கல்பாத்தி அகோரம் மற்றும் மதுரையை சேர்ந்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது.

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஜய் நாளை வருமான வரித்துறை முன்பு விசாரணைக்காக ஆஜராவார் என்று கூறப்படுகிறது.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படம் ரூ.180 கோடி செலவில் உருவானதாக அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா அகோரம் டுவீட் செய்திருந்தார். மேலும் இப்படம் ரூ.300 கோடி ஈட்டியதாக செய்திகள் பரவின.

இதனை தொடர்ந்து வருமான வரித்துறையினர் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்குகள், அலுவலகங்கள், வீடுகள், நடிகர் விஜய்யின் பண்ணை வீடு, நீலாங்கரை, சாலிகிராமம் வீடுகள், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரை வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் 38 இடங்களில் சோதனை நடத்தினர்.
நெய்வேலி படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். அன்புச் செழியன் வீட்டில் இருந்து சுமார் ரூ. 77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஏராளமான பத்திரங்கள், தஸ்தாவேஜ்கள், காசோலைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

மூன்று பேரும் மாறுபட்ட தகவல்களை கூறியதால் இது குறித்து உண்மையை கண்டறிவதற்கு வருமானவரித்துறை முடிவு செய்தது.
இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமாறு நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவன அதிபர் கல்பாத்தி அகோரம், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது.

நடிகர் விஜய் இன்று விசாரணைக்கு ஆஜராவார் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நெய்வேலி என்எல்சி வளாகத்தில் நடைபெற்று வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைவதால் நாளை தான் அவர் விசாரணைக்கு ஆஜராவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.