சென்னை, பிப்.10: பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட 1503 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 9 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முகாம் அலுவலகத்தில் வழங்கினார்.

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 12.6.2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 27.9.2019, 28.9.2019 மற்றும் 29.9.2019 ஆகிய மூன்று நாட்கள் தேர்வுகள் நடத்தப்பட்டன.

அதன்படி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 1503 நபர்களுக்கு 9.2.2020 மற்றும் 10.2.2020 ஆகிய நாட்களில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் கல்வி மேலாண்மை தகவல் மையம் மூலமாக கலந்தாய்வு நடத்தப்பட்டன. அதன் அடிப்படையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 1503 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 9 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட இயக்குநர் ஆர். சுடலைக்கண்ணன், பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர்
க. லதா, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.