சென்னை, பிப்.11: சென்னை மாநகராட்சியில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக நடந்து செல்லவும், சைக்கிள், வாகனங்களுக்கு தனி வசதியும் கொண்ட பெரும் சாலைகள் என்ற திட்டத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சி பெரும் சாலைகள் என்ற சீரிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. இதன் பயன்கள், மக்கள் மகிழ்ச்சியாக வாழும் ஒரு நிலையை உண்டாக்குகிறது. இத்திட்டம் மக்கள் இடையூறு இல்லாமல் நடப்பதற்கும், மேலும், பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றவர்கள், மிதிவண்டி உபயோகிப்பவர்கள் பாதுகாப்பான முறையில் செல்வதற்கு வழிவகை செய்கிறது. இந்த சாலைத் திட்டத்தினால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு சேவை நிறுவனங்கள் சாலைகளை வெட்டும் பணி முற்றிலுமாக தவிர்க்கப்படும்.

இந்திய அளவில் பாராட்டப்படும் வகையில் பாதசாரிகள் வளாகம் சென்னை தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை முழுவதும் மிதிவண்டி பகிர்மானத் திட்டம் அமுல்படுத்தப்பபட்டு, மக்களின் சீரிய போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அனைத்து சேவைத் துறைகளின் வடங்களான குடிநீர் குழாய்கள் மின்வடங்கள், மழைநீர் வடிகால்கள் போன்றவை சரியான முறையில் திட்டமிடப்பட்டு அமைக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், இத்திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களில் பேருந்து சாலைகள் முழுமையான சாலைகளாக மாற்றியமைக்கப்படும். இத்திட்டத்தில் 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், 400 கி.மீ. நீளமுள்ள பேருந்து சாலைகள் மற்றும் மற்ற துறைகளிடம் உள்ள 286 கி.மீ. நீளமுள்ள பிரதான சாலைகளும் படிப்படியாக மேம்படுத்தப்படும். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் விக்ரம் கபூர், சென்னைப் பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன், தமிழ்நாடு போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.