சென்னை, பிப்.11: ரஜினி கட்சியுடன் பாமக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், முதலில் அவர் கட்சி ஆரம்பிக்கட்டும் என்று பதிலளித்தார். அவரது கட்சியுடன் பாமக கூட்டணி சேரும் என்று வெளியான செய்திக்கு தாம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி இன்று சென்னை திநகரில் உள்ள பாமக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை வெளியிட்ட கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது ரஜினி ஆரம்பிக்கும் புதிய கட்சியுடன் பாமக கூட்டு சேரும் என்று தமிழருவி மணியன் கூறியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ராமதாஸ் இந்த தகவல் முக்கியத்துவம் இல்லாதது என்பதால் இதற்கு நான் உடனடியாக பதிலளிக்கவில்லை. பாமக கூட்டணி அமைப்பது குறித்து கட்சி அமைப்பில் தான் முடிவெடுக்கப்படும். நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். அதன் பிறகு மற்றதை பார்ப்போம் என்றார்.

பாமக வெளியிட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில், வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்ந்த துறைகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்தை பாதுகாப்பான முறையில் உறைகளில் அடைத்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு நேரடியாகவும், 2 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.