புதுடெல்லி, பிப்.11: டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் அதிக இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் கெஜ்ரிவால் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த தேர்தலில் மூன்று இடங்களை பெற்றிருந்த பிஜேபி தற்போது 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை போலவே இப்போதும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் பூஜ்யம் என்ற நிலையில் உள்ளது.
எழுபது உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.

ஆரம்பம் முதல் ஆம் ஆத்மி முன்னிலை பெற்று வருகிறது. பகல் ஒரு மணி அளவில் 57 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் ‘ஹாட்ரிக்’ அடிக்கிறார்.
ஆம் ஆத்மி 50.74 சதவீதமும், பிஜேபி 40 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன. கடந்த தேர்தலை விட பிஜேபி 7 சதவீதம் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 4 சதவீதம் வாக்குகள் தான் கிடைத்துள்ளது.

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் 6,700 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். துணை முதல்வர் மணிஷ் சிசோடியா படக் கஞ்ச் தொகுதியில் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்தார். ஆனால் தற்போது பிஜேபி வேட்பாளரை விட 1400 வாக்குகள் குறைவாக பெற்று பின்தங்கி உள்ளார்.
இதனிடையே, ஆம் ஆத்மியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து சாந்தினி சோக் தொகுதியில் போட்டியிட்ட அல்கா லம்பா பின்னிலையில் இருந்து வருகிறார்.
இதேபோன்று பிஜேபிக்கு சென்று மாடல்வுடன் தொகுதியில் போட்டியிட்ட கபில் மிஸ்ரா பின்னிலையில் இருந்து வருகிறார்.

இன்று பகல் ஒரு மணியளவில், ஆம் ஆத்மி கட்சி 57 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. முடிவு அறிவிக்கப்பட்ட ஆறு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெற்றுள்ளது. பிஜேபி 13 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எந்த தொகுதியிலும் முன்னணியில் இல்லை. தொடர்ந்து அந்த கட்சி ஒரு இடத்தை கூட பெறமுடியாத நிலை உள்ளது.
மீண்டும் ஆட்சியமைக்கும் அளவுக்கு அதிக இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளதால் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டசபை கலைப்பு:
ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க இருப்பதை தொடர்ந்து டெல்லி சட்டசபையை கலைத்து மாநில கவர்னர் உத்தரவிட்டார்.

ராகுல் மவுனம்:
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாதது குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். ஆனால் அவர் கருத்து எதுவும் சொல்ல மறுத்துவிட்டார்.

மத்தியப்பிரதேச மாநில முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத் கூறுகையில், தங்கள் கட்சியின் தோல்வி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றார். ஆனால் நாங்கள் வெற்றி பெறுவோம், ஆட்சி அமைப்போம் என்று பிஜேபி மார் தட்டியது, அவர்களுக்கு தோல்விதான் கிடைத்திருக்கிறது என்று கமல்நாத் குறிப்பிட்டார்.