சென்னை, பிப்.11: காவிரி டெல்டா பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்ததை தொடர்ந்து நெடுவாசல் போராட்ட குழுவினர் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

போராட்டம் தொடர்பான வழக்குகளை வாபஸ் பெறப்படும் என முதல்வர் உறுதி அளித்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் கிரீன்வேஸ் இல்லத்தில் முதல்வரை நெடுவாசல் போராட்டக் குழுவை சார்ந்த வேலு ஆசிரியர் தலைமையில் 5 கிராமத்தை சார்ந்த மக்கள் முதல்வருடன் சந்தித்தனர். சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டின் அடிப்படையில் நடந்த இந்த சந்திப்பில் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த நெடுவாசலை சேர்ந்த ஆசிரியர் வேலு, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய 2017இல் முதல்வரை சந்தித்து கோரிக்கைவிடுத்தோம். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்த கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்தது.
மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு டெல்டா பகுதியை அறிவித்தது வரவேற்கத்தக்கது. அறுபது பேர் நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்தவர்கள் முதல்வரை சந்திக்க வந்தோம்.

நெடுவாசல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம் என்றார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி:
நெடுவாசல் மக்கள் தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் தான் ஒரு விவசாயி என்ற அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார்
நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை வாபஸ் வாங்க முதல்வர் நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்துள்ளார்.