வாஷிங்டன், பிப்.11: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகிற 24 மற்றும் 25-ம்தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு வரும் மூன்றாவது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவரும் வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதற்காக இந்த பயணம் அமையும் என்றும் அதில் தெரிவித்து உள்ளது.
கடந்த வாரம் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி இருவரும் தொலைபேசி வழியே பேசி கொண்டனர் என்றும் அதனை தொடர்ந்து இந்த பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி வரும் அமெரிக்க அதிபர் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் செல்கிறார். ஆமதாபாத் நகரில் உள்ள நாட்டு விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடுகிறார். மேலும் அங்குள்ள முக்கிய இடங்களையும் பிரதமர் மோடியுடன் பார்வையிடுகிறார்.

பின்னர் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோரை டிரம்ப் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த செப்டம்பரில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு சென்ற பிரதமர் மோடியை வரவேற்ற டிரம்ப் விருந்து வழங்கினார். இந்த பயணத்தில் பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் ’ஹவுடி மோடி’ என டிரம்ப் குறிப்பிட்டார்.