சொகுசு கப்பலில் தவிக்கும் இந்தியர்கள்

உலகம்

பெய்ஜிங், பிப்,11:

கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சீனர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்குவதை தவிர்க்க வேண்டும் என ஜி ஜின்பிங் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதனிடையே ஹாங்காங்கில் இருந்து வந்த சொகுசு கப்பல் ஜப்பான் துறைமுகத்தில் 10 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்த 135 பேருக்கு கொரொனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கப்பலில் இருந்து இறங்க யாரையும் அனுமதிக்கவில்லை. இதிலிருந்து 15 இந்தியர்களை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சீனாவில் மூச்சுகாற்றினால் மட்டுமின்றி, சாதாரண காற்றினால் கூட கொரொனா வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது. இதுவரை 900க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த வாரம் கம்போடிய பிரதமரை சந்தித்து பேசிய பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அவர் ரகசிய இடத்தில் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அதிபர் ஜி ஜின்பிங் நேற்று பெய்ஜிங்கில் முனிசிபல் அலுவலகத்தில் பொது மக்களை சந்தித்தார். அப்போது முக கவசம் அணிந்த ஒரு பெண் கைகுலுக்க முன்வந்த போது ஜி ஜின்பிங் தனது கைகளை பின்னால் வைத்து கொண்டார். அவர் கூறுகையில், இந்த இக்கட்டான தருணத்தில் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்குவதை தவிர்க்க வேண்டும்.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை சீனாவில் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே நாளில் 3602 பேருக்கு கொரொனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் மொத்தம் 40,171 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.

சீனாவில் மட்டுமின்றி ஜப்பானுக்கும் இந்த வைரஸ் பரவி இருக்கிறது. யோகோகாமா துறைமுகத்தில் கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் இருக்கும் 3700 பயணிகளில் 135 பேருக்கு கொரொனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கப்பலில் இருக்கும் பயணிகள் கீழே இறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

உலகின் 2-வது பொருளாதார நாடான சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை காரணமாக நாட்டின் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுகிடக்கின்றன. இதனால் ஐரோப்பிய நாடுகளில் தொழில்நுட்ப உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் உலகளவில் சீனர்களை கண்டாலே விலகி செல்லும் நிலைமை உருவாகி வருகிறது. ரஷ்யாவில் உரால் நகருக்கு வந்த சீன தூதர் ஹூசாசூன் நேற்று தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.