சென்னை, பிப்.12: ஆசியாவிலேயே தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முதலாவது இடத்தில் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

4000 கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்பட்டுள்ள சியட் நிறுவனத்தின் டயர் தொழிற்சாலையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது:-

வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைமையகமாக விளங்கும் தமிழ்நாடு, டயர் உற்பத்தியிலும் முதலிடம் பெற்றுள்ளது. அப்பல்லோ, ஜே.கே., மிஷ்லின், எம்ஆர்எப் , டி.வி.எஸ், யோகோ ஹாமா என, திருவள்ளூர் முதல் திருநெல்வேலி வரை, பல டயர் உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. இருசக்கர வாகனங்கள் முதல் போர் விமானங்கள் வரை அனைத்து வகை பயன்பாட்டிற்குமான டயர்களும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்திலே பகிர்ந்து கொள்கின்றேன். இந்தியாவின் 40 சதவீத டயர் உற்பத்தி தமிழ்நாட்டில் தான் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மணிமகுடத்தில், மேலும் ஒரு மாணிக்கமாக இந்தத் தொழிற்சாலை அமைந்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

தரமான சாலைகள் மற்றும் துறைமுகங்கள் என சிறப்பான உட்கட்டமைப்பு, தடையில்லா மின்சாரம், திறன் மிக்க மனிதவளம், பல முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் அருகே அமைந்துள்ளதால் கிடைக்கும் சிறந்த சந்தை வாய்ப்பு, பொருளாதார உயர்வால் உள்ள சிறப்பான வாகன நுகர்வு மற்றும் சிறப்பான சரக்கு போக்குவரத்து கட்டமைப்பு காரணமாக அதிக அளவில் உள்ள இரண்டாம் கட்ட சந்தை வாய்ப்பு என, ஒரு டயர் உற்பத்தி தொழிற்சாலையின் சிறப்பான வெற்றிக்குத் தேவையான அனைத்தும் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.

பல்வேறு காரணங்களால் இயக்கப்படாமல் நின்ற நிறுவனங்கள் கூட, தமிழக அரசின் சிறப்பான செயல்படுகளால் புத்துயிர் பெறும் சூழல் உருவாகி இன்றைக்கு திறக்கப்பட்டு வருகின்றன.
ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் மாபெரும் சக்திகளில் ஒரு மாநிலம் என்று சொன்னால், தமிழ்நாடு தான் என்று இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.