சென்னை, பிப்.12: பிகில் சினிமா வரி ஏய்ப்பு தொடர்பாக அந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி உட்பட இரண்டு பேர் வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்கள்.

பிகில் படத் தயாரிப்பை முழுமையாக கையாண்டவர் அர்ச்சனா கல்பாத்தி. கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஏஜிஎஸ் தியேட்டரில் 100 நாளை நிறைவு செய்த போது ஒரு டுவிட்டை வெளியிட்டார்.

வெறித்தனமான கொண்டாட்டம் என்றும், பிகில் மிக அதிக தொகையை ஈட்டி உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். அவருடைய இந்த டுவீட்டை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் ஏஜிஎஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், திரையரங்குகள், அந்த படத்தின் கதநாயகன் விஜய்யின் வீடுகள், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகள் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் சோதனை நடத்தினார்கள்.

அப்போது முக்கிய தஸ்தாவேஜ்கள் சிக்கின. கணக்கில் காட்டப்படாத பணமும் கைப்பற்றப்பட்டன. இதனை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவனம் ஆகியோருக்கு வருமானவரித்துறையினர் சம்மன் அனுப்பினார்கள்.

விஜய் மற்றும் அன்புச்செழியன் தரப்பில் அவர்களின் ஆடிட்டர்கள் நேற்று ஆஜராகி வருமானவரித்துறை அதிகாரிகளின் கேள்விக்கு பதிலளித்தனர். இந்த நிலையில் பிகில் பட தயாரிப்பை முழுமையாக கையாண்ட ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவருடன் அவரது ஆடிட்டரும் உடன் சென்றார். பிகில் படம் தயாரிப்பு செலவு எவ்வளவு? அந்த படம் வருவாயை ஈட்டியது எவ்வளவு போன்ற தகவல்களையும், நடிகர் விஜய்க்கு அளிக்கப்பட்ட சம்பளம் பற்றியும் வருமான வரித்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரித்தனர். இதனிடையே விஜய்யின் ஆடிட்டர் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு ஆஜரானார்.