சென்னை, பிப்.12: போரூர் அருள்மிகு ஸ்ரீசிவவீர ஆஞ்சநேயர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 9-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று காலை 6.30 மணிக்கு கோ பூஜை, 4-ம் கால யாகபூஜை, பிம்பசுத்தி, ரக்ஷா பந்தனம், நாடி சந்தானம், ஸ்பர்சாஹு நடைபெற்று, 9.30 மணிக்கு மகா பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாத்ரா தானத்துடன் கடங்கள் புறப்பட்டு கோபுரங்களை அடைந்தன.

ஆலயம் முன்பு உள்ள 30 அடி உயர பிரம்மாண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் கிரீடத்தில் உள்ள கலசம் உள்பட அனைத்து விமானங்களுக்கும் காலை 10.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 11 மணிக்கு மூலவர்கள் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவர் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த எஸ்ஆர்எம்சி காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமாருதி பக்த சமாஜம் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.