மெல்போர்ன், பிப்.12:  முத்தரப்பு பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 11 ரன்களில் வீழ்த்தி, ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், கன்பெர்ரா ஆகிய நகரங்களில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 3 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோதிக் கொண்டன. லீக் சுற்று முடிவில் மூன்று அணிகளும் தலா 2 வெற்றி, 2 தோல்வியுடன் சமநிலை வகித்தன. ரன்-ரேட் அடிப்படையில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் மெல்போர்னில் இந்திய நேரப்படி இன்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது. இதில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா அணி முதல் பேட்டிங் செய்தது. தொடக்கவீராங்கனை பெத் மூனே அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 54 பந்துகளில் அரைசதம் கடந்து 71 ரன்கள் குவித்த பெத், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்கவீராங்கனை ஸ்மிரிதி மந்தனா பொறுப்புடன் கூடிய அதிரடியுடன் விளையாடி 37 பந்துகளில் அரைசதம் (66) கடந்தார். இருப்பினும், அடுத்தடுத்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் ஆல்-அவுட் ஆகி 144 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி தொடரை வென்று, சாம்பியனானது.