துபாய், பிப்.12:  சர்வதேச டி20 போட்டி சமனில் முடியும் பட்சத்தில் கடைப்பிடிக்கப்படும் சூப்பர் ஓவர் விதிமுறையில் சில மாற்றங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இந்த சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தால் பவுண்டரிகள் அடிப்படையில் வெற்றிபெறும் அணி அறிவிக்கப்பட்டுவந்தது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைப்பபிடிக்கப்பட்ட இந்த விதிமுறை பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களை வாங்கிக்கொண்டது. எனவே, தற்போது இந்த விதிமுறைகளில் ஐசிசி புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

போட்டி ‘சமனி’ல் முடிந்தால் சூப்பர் ஓவர் விளையாடப்படும். சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனால், தொடர்ச்சியாக முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் விளையாடப்படும்.

இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தால் ஒரு அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வரும்.

ஒவ்வொரு அணிக்கும் தலா ஒரு ‘ரிவ்யூ’ வாய்ப்பு வழங்கப்படும்.

சூப்பர் ஓவர் மழை போன்ற காரணத்தினால் நீண்ட நேரமாக நடைபெறவில்லை என்றால் போட்டி கைவிடப்படும்.

போட்டியில் 2-வது பேட்டிங் செய்த அணி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்யும்.

முதலில் பீல்டிங் செய்யும் அணி பந்தை தேர்வு செய்யலாம். 2-வது பீல்டிங் செய்யும் அணி அதே பந்தை தேர்வு செய்யலாம். பந்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினால், போட்டி நடைபெறும் சூழ்நிலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

பீல்டர்கள் கட்டுப்பாடு போட்டியின் கடைசி ஓவரில் எப்படி இருந்ததோ, அதே போன்று இருக்கும்.

சூப்பர் ஓவருக்கான இடைவேளை ஐந்து நிமிடங்கள்.

டி20-க்கான இந்த புதிய விதிமுறை எதிர்வரும் தென்னாப்பிரிக்கா-இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா தொடரில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.