சென்னை, பிப்.12:
‘இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ‘இந்து மகா சபா’ மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எடுத்தது’ என பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள வரலாற்றை ஏன் நீக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் வெளியிட்ட பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் ‘இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ‘இந்து மகா சபா’ மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாட புத்தகத்தில் இருந்து இந்த வாசகங்களை நீக்கக் கோரி ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சந்திரசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரியும் ஆர்.எஸ்.எஸ். குறித்த வரலாற்று வாசகங்களை பாட புத்தகத்தில் இருந்து நீக்க தடை கோரியும், தந்தை பெரியார் திராவிட கழக துணைத்தலைவர் துரைச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர், அடங்கிய பெஞ்சில் விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர்களான நாதுராம் கோட்சே, சாவர்க்கர், கோல்வார்கள் போன்றவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள் என்பது வரலாறு என்ற நிலையில், ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்களை நீக்கக்கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதைகேட்ட நீதிபதிகள், ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு, தற்போது நம்முடன் நட்புறவு கொண்டுள்ள சீனா இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தது போன்ற வரலாற்றை எப்படி மறைக்க முடியாதோ, அதேபோல தான் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ். எடுத்ததையும் மறைக்க முடியாது என கருத்து தெரிவித்தனர்.
இதுபோன்ற வரலாறுகளை பாட புத்தகங்களில் இருந்து நீக்க என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக மார்ச் 19- ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.