சென்னை, பிப்.13: தமிழக அரசின் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தலுக்கு முந்தைய, அதிமுக அரசின் முழு பட்ஜெட்டாகும் இது.
மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, அரசு ஊழியர்களுக்கு ஓய்வுதியம், புதிய மாவட்டம், தாலுக்காக்கள் பற்றிய முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையின் 2020-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் பட்ஜெட் நாளை 14-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் மக்களை கவரக்கூடிய பல்வேறு திட்டங்கள் இந்தே பட்ஜெட்டில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நாளை தாக்கல் செய்யப்பட்டவுள்ள பட்ஜெட்டில் இடம் பெறவுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே மதிய உணவு திட்டம் தமிழக பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கும் வகையில் காலை உணவு திட்டம் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காலை உணவில் பொங்கல், இட்லி, உப்புமா, கிச்சடி போன்றவை வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது.

மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீர்நிலைகளில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும், புதிய மாவட்டங்கள், தாலுக்காக்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட் உரை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். அதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்று முடிவு செய்து அறிவிக்கப்படும். அதன்படி 14ம் தேதி பேரவை கூட்டம் முடிந்ததும், மீண்டும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை பட்ஜெட் குறித்து விவாதிப்பதற்கான கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது.

இதன் பின்னர் சட்டசடபை ஒத்தி வைக்கப்பட்டு, மானிய கோரிக்கை மீதான துறை ரீதியான விவாதம் மார்ச் முதல் வாரம் தொடங்கி ஒரு மாத காலம் நடைபெறும் என தெரிகிறது. நாளை தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் சிஏஏ குறித்து விவாதிக்க வேண்டுமென திமுக சார்பில் பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு, ஹைட்ரோ கார்பன் திட்டம், குடியுரிமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை குறித்து சட்டசபையில் காரசாரமான விவாதம் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.