புதுடெல்லி, பிப்.13: கருணை மனுவை அவசர கோலத்தில் நிராகரித்ததால் அதை மீண்டும் பரீசிலனைக்கு எடுக்க அனுமதிக்க வேண்டும் என்ற நிர்பயாவின் குற்றவாளி வினய் சர்மா கடைசியாக விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றாவாளிகளில் ஒருவர், வினய் சர்மா. இவர், உச்சநீதிமன்றத்தில் புதிதாக தாக்கல் செய்த மனுவில், தனது கருணை மனுவை ஜனாதிபதி அவசரஅவசரமாக நிராகரித்தது, அரசியல் சட்ட உணர்வுகளுக்கு எதிரானது என்றும், மேலும், ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட பரிந்துரை கடிதத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் டெல்லியின் உள்துறை அமைச்சர் கையெழுத்து இல்லை என்று கூறியிருந்தார்.
இதன்காரணமாக, கருணை மனுவை மீண்டும் பரீசிலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி ஆர். பானுமதி, அசோக் பூஷன், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று நிராகரித்தது.

ஆனாலும், பரிந்துரை கடிதத்தில் துணை நிலை ஆளுநர் மற்றும் உள்துறை அமைச்சரின் கையெழுத்து உண்மையில் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஒரே காரணத்திற்காக குற்றவாளியின் கோரிக்கை ஏற்க வேண்டியதில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் நான்கு பேரின் ஒவ்வொரு மனுக்களும் அடுத்தடுத்து நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தூக்கில் போடுவதற்கான தேதியை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.