சென்னை, பிப்.13: கடந்த 2018-ம் ஆண்டு காமராஜ் நினைவு நாளன்று பேட்டியளித்த சீமான் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர்மீது 3 பிரிவுகளின் கீழ் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 2018 அக்டோபர் 2-ம் தேதி காமராஜர் நினைவு நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தபோது, அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது.
இந்த புகாரின்பேரில், சீமான் மீது 3 சட்டப்பிரிவுகளின்கீழ் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல், மயிலாப்பூர் மாங்கொல்லை பகுதியில் மே 17 இயக்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இரு சமூகங்களை சேர்ந்தவர்களிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும், வேத இதிகாசங்களை பற்றி இழிவாக பேசியதாகவும் மற்றும் அரசுக்கு எதிராக பேசியதாகவும் புகார் எழுந்ததும்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருமுருகன் காந்தி மீது 3 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, சிஏஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 30-ம் தேதி மாலை முத்துசாமி பாலத்திலிருந்து அண்ணாசாலை வழியாக கோஷங்களை எழுப்பியவாறு மனிதசங்கிலி நடைபெற்றது.
இந்த மனிசங்கிலி போராட்டம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், முறையான அனுமதி பெறாமலும் நடந்ததாக புகார் எழுந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு, இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட 3 கட்சிகளின் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.