மதுரை, பிப்.13: மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று மூன்று வாரத்தில் பதிலளிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மாநில தேர்தல் ஆணையம் தற்போது ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கான தேர்தலை முதற்கட்டமாக நடத்தப்படுகிறது.
இரண்டாவது கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று 2 வாரங்களில் பதிலளிப்பதாக விசாரணையின் போது தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி துரைசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள்; ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும்? மேலும் அதற்கான பதில் அறிக்கைகள் தங்களிடம் உள்ளதா? என மாநில தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினர்.

அப்போது தமிழக தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்; இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடவில்லை அது வெளியிடப்பட்டால் மட்டுமே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவத்தற்கான தேதி அறிவிக்கப்படும். எனவே எங்களுக்கு மேலும் 4 வார காலம் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு மனுதாரர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஏன் 4 வார கால அவகாசம் தேவைப்படுகிறது? 3 வார கால அவகாசத்திற்குள் நகர்ப்புற தேர்தல் எப்போது நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.