வாஷிங்டன், பிப்.13: அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற முறையில் முதல் முறையாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் கூறியிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் மற்றும் அவரது மனைவியை வரவேற்க காத்திருப்பதாக பிரதமர் மோடி அனுப்பியுள்ள டுவீட்டுக்கு பதிலளித்து அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் நடைபெறும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள தாம் ஆர்வமாக இருப்பதாக டிரம்பின் மனைவி கூறியிருக்கிறார்.
டெல்லி மற்றும் அகமதாபாத்தில் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் டிரம்ப் தம்பதியினர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். அமெரிக்காவில் மோடிக்கு அளிக்கப்பட்ட உற்சாகமான வரவேற்பைப் போலவே பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பல லட்சம் பேர் பங்கேற்கும் வரவேற்பை அளிக்க திட்டமிட்டுள்ளார்.

நீங்கள் மிகவும் எங்களுக்கு வேண்டிய விருந்தினர்கள் என்ற முறையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது என்று மோடி கூறியிருக்கிறார்.