சென்னை, பிப்.13:  எதிர்வரும் ஐபிஎல் டி20 தொடரையொட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) வீரர்கள் தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுவரும் புகைப்படங்கள் சி.எஸ்.கே.வின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் மார்ச் 29-ம் தேதி தொடங்கி மே 24-ம் தேதி நிறைவடைகிறது. இந்த தொடருக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், ஒருபுறம் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், கடந்தமுறை தவறவிட்ட கோப்பையை இந்தமுறை வென்றாக வேண்டும் என உத்வேகத்துடன் சி.எஸ்.கே. வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை மெய்ப்பிக்கும் வகையில், சென்னை ரசிகர்களால் ‘சின்னதல’ என்று செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, முரளி விஜய் ஆகியோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை சி.எஸ்.கே. தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை பார்த்து உச்சி குளிர்ந்துள்ள சென்னை ரசிகர்கள், ‘சிங்கங்கள் களமிறங்கியாச்சு’. ‘சி.எஸ்.கே.வுக்கு விசில் போடு’ என்பது உள்ளிட்ட கமெண்ட்ஸ்களுடன் புகைப்படங்களை ஷேர் செய்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.