அம்பத்தூர், பிப்.14: ஆவடியில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுவன், எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அன்பழகன் தெருவில் வசித்து வருபவர்கள் காந்தி- வள்ளி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் 6 வயதில் சுமுகன், சுதேகன் என்ற இரட்டை மகன்கள் உள்ளனர்.
இரட்டையர்கள் இருவரும் அருகே உள்ள தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.இந்த நிலையில், பள்ளி முடிந்த வீட்டிற்று வந்தவர்கள் நேற்று மாலை வீட்டிற்கு வெளியே கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, ஒளிந்து கொள்ள சென்ற இரட்டையர்களில் ஒருவனான சுமுகன் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. தகவலறிந்து பதறிப்போன பெற்றோர், சுமுகனை வீடு, தெரு என பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.இரவு வரை தேடியும் சிறுவன் சுமுகன் கிடைக்காததால், ஆவடி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதனடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் சிறுவனை தேடியதில், சிறுவன் சுமுகன் வீட்டை விட்டு வெளியே செல்லாதது உறுதியானது.
இதனை அடுத்து வீட்டை சுற்றி ஆய்வு செய்த போலீசார், வீட்டில் உள்ள கழிவு நீர் தொட்டியில் சிறுவன் தவறி விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில்இ ஆட்களை வரவழைத்து ஆய்வு செய்ததில், சிறுவன் சுமுகன் தொட்டியில் சடலமாக இருந்தது கண்டறியப்பட்டது.

சடலத்தை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.