சென்னை, பிப்.14: தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக பட்சமாக ரூ.34 ஆயிரத்து 181 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு ரூ.5,052 கோடியும், நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1,403 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை வழங்க தமிழக அரசு அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34 ஆயிரத்து 181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடப்புக் கல்வி ஆண்டில் 76 ஆயிரத்து 927 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படிப்புக்குத் தேவையான பொருட்களை விலையின்றி வழங்கும் திட்டத்திற்கு ரூ.1,018.39 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.966.46 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் மாணவர் ஆசிரியர் விகிதம் கட்டாயக் கல்விச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட விகிதத்தைக் காட்டிலும் போதுமான அளவில் உள்ளது.
அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.520.13 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
உயர் கல்வித் துறைக்கு ரூ.1,949 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது”.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.