சென்னை, பிப்.14: தமிழகத்தில் முதலமைச்சரின் கிராம தன்னிறைவு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-20-ம் ஆண்டில், ஊராட்சி ஒன்றிய, கிராமப்புறச் சாலைகளை தரம் உயர்த்திப் பராமரிப்பதற்காக தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டம் 1,200 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-21-ம் நிதியாண்டில், இத்திட்டமானது 1,400 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். பிரதம மந்திரி கிராமப்புறச் சாலைகள் திட்டத்தின் மூன்றாவது கட்டப் பணிகளின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற வேளாண் சந்தைகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை இணைக்கக் கூடிய வகையில் 7,375 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ஊரக வளர்ச்சித்துறைக்காக 23,161.54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
மேலும் முதல் முறையாக முதலமைச்சரின் கிராம தன்னிறைவுத் திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.