சென்னை, பிப்.14: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், 2020-21-ம் ஆண்டில் 1,12,876 தனி வீடுகளும், 65,290 அடுக்கு மாடி வீடுகளும் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ.3100 கோடியும், பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரூ.70 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. முத்திரைத்தாள் கட்டணம் 1 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பது வருமாறு:-
தமிழ்நாட்டில் குடிசை இல்லாத நகரங்கள் உருவாக்குவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. 2014-15-ம் ஆண்டு முதல் பிரதம மந்திரி வீட்டுவசதித் (நகர்ப்புரம்) திட்டத்தின்’, பயனாளிகள் தாமாக தனி வீடுகள் கட்டும் பிரிவின் (பிஎல்சி) கீழ் 16,774.77 கோடி ரூபாய் செலவில் 5,53,244 வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இத்துடன், வாங்கும் திறனுக்கேற்ப கூட்டுமுயற்சி வீட்டுவசதி (ஏஎச்பி) பிரிவின் கீழ், 1,32,900 அடுக்கு மாடி குடியிருப்புகளை 13,677.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைப்பதற்கும் மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டில், 1,12,876 தனி வீடுகள் மற்றும் 65,290 அடுக்குமாடி குடியிருப்புகளுக்குமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பிரதம மந்திரி வீட்டுவசதித் (நகர்ப்புரம்) திட்டத்திற்காக 3,700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மானியம் உயர்வு:
படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயன்களை விரிவுபடுத்தும் வகையில், தற்போதுள்ள திட்ட முதலீட்டிற்கான வரம்பு 10 லட்சம் ரூபாயிலிருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதுடன், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தகுதி வாய்ந்த மானியத்தின் வரம்பும் 1.25 லட்சம் ரூபாயிலிருந்து 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

பேருந்துகளில் சிசிடிவி:
பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை மேம்படத்தும் வகையில் நிர்பயா நிதியத்தின் மூலம் ரூ.75.02 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து பேருந்துகளிலும் பொருத்தப்படும். அனைத்து பேருந்துகளிலும் பணமில்லா பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் வகையில் மின்னணு பயணச்சீட்டு முறை செயல்படுத்தப்படும்.
முத்திரைத்தாள் கட்டணம் 1 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை நகர் முழுவதும் மின்சார ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும். இந்தியாவிலேயே முதல்முறையாக இத்திட்டம் பெரிய அளவில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
பெருநகர குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் மூலம் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் கூடுதல் நிதி:
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் பங்கு மூலதன உதவி, சார்நிலைக்கடன் மற்றும் வெளிநாட்டுக் கடனை விடுவிக்க ரூ.3100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.