சென்னை, பிப்.14: தற்போதைய பொருளாதார மந்த நிலையிலும் தமிழகம் உயர் பொருளாதார வளர்ச்சியை பெற்றிருப்பதாக தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பட்ஜெட்டில் கூறியிருப்பது வருமாறு:-

தற்போது பொருளாதார மந்த நிலை நிலவினாலும் வரும் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும் போது தமிழகம் உயர் பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வள ஆதாரங்களை கூட்டுதல் மற்றும் திறன்மிக்க வரி வசூல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக மாநிலத்தின் மொத்த வருவாயை வலுவான நிலையில் பராமரிக்க இயலும். வளர்ச்சிக்கான செலவினங்களின் மீது முதலீடு செய்யும் அதே வேளையில் நிதி சேர்ப்பு நடவடிக்கையாக அடிப்படை கொள்கையாக கொண்டு சம நிதி நிலையை உறுதி செய்வதன் மூலம் தமிழ்நாடு நிலை நிர்வாக பொறுப்புடைமை சட்டத்தின் கீழ் வரையறைகளின் படி வருவாய் பற்றாக்குறையை வரும் காலங்களில் குறைக்க இயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்டவாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 2020-2021 ஆண்டில் தமிழக அரசின் கடன் ரூ. 4 லட்சத்து 56 ஆயிரத்து 660.99 கோடியாக இருக்கும் என்றும், வருவாய் பற்றாக்குறை ரூ25.71 ஆயிரம் கோடியாகவும் உள்ளது. ரூ 59 ஆயிரத்து 209 கோடி கடன் வாங்க திட்டமிட்டிருப்பதாகவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.