சென்னை, பிப்.14:  அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, இன்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானார்.

முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்பாலாஜி 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் ரூ.95 லட்சம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் இருந்தது.
இந்த மோசடி குறித்து அம்பத்தூர் கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஏற்கனவே புகார் அளித்தன்பேரில், சென்னை மந்தைவெளியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரத்தில் சோதனையிட்டனர். உதவி ஆணையர் ராமச்சந்திர மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் 5-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

சோதனையின் முடிவில், செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அவரது துறையில் அளிக்கப்பட்ட பணி நியமன ஆணைகள் உட்பட முக்கிய ஆவணங்கள், மெமரிகார்டு, பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் மற்றும் ரூ.1.60 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, செந்தில்பாலாஜியும், அவரது சகோதரரும் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். செந்தில்பாலாஜியை விசாரணைக்கு ஆஜராகக் கூறி சம்மன் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமே நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. எனவே முன்ஜாமீன் உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் எனவும் அவர் முறையீடு செய்திருந்தார்.

இதனால், இந்தவழக்கு விசாரணைக்கு செந்தில்பாலாஜி பிப்ரவரி 14-ம் தேதி (இன்று) சம்பந்தப்பட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் எனவும், முன்ஜாமீன் உத்தரவில் திருத்தம் கோருவது தொடர்பாக அரசு தரப்பில் திருத்த மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி டி எஸ் பி ராமசந்திர மூர்த்தி முன்பாக செந்தில் பாலாஜி இன்று காலை 9.30 மணியளவில் ஆஜரானார். அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணி நியமன ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்தும் அவர் போலீசில் விளக்கமளித்ததாக கூறப்பட்டுள்ளது.