சென்னை, பிப்.17:  குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து பேரவையில் தற்போது விவாதிக்க முடியாது. இது தனது ஆய்வில் உள்ளதாக சட்டசபையில் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில்: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்துகிறேன். குடியுரிமை சட்டத்திருத்தத்தால் தமிழ்நாடு போராட்டக்களமாக மாறி வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாக அறவழியில் நடந்த போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

இதனை வலியுறுத்தி காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் பேசினார். இதற்கு சபாநாயகர் பதிலளித்து பேசுகையில்: இந்த பொருள் குறித்து சட்டசபையில் விவாதிக்க முடியாது. திமுகவின் கடிதத்தை ஏற்பது குறித்தும் முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகர் உள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக கொடுத்த மனுவுக்கு மறுப்பு தெரிவித்து கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது-

ஏற்கனவே நிராகரித்த கோரிக்கையை மீண்டும் அவையில் கொண்டு வர முடியாது. திமுக கொடுத்த கடித பொருளை ஏற்க முடியாது என மறுத்துவிட்டேன்.
சபாநாயகரின் இந்த பேச்சு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோஷங்கள் எழுப்பினர், அப்போது அவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் சபாநாயகர் பேசுகையில்: எனது தீர்ப்பை வலியுறுத்த கூடாது. பதில் கடிதம் அனுப்பிவிட்டேன். எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தும் பொருள், நீதிமன்றத்தில் இருக்கிறது. இதை, கடித த்தில் தெரிவித்துள்ளேன்.

இதனை எதிர்கட்சிகள் ஏற்க மறுத்து தொடர்ந்து கோஷம் எழுப்பியவாரே இருந்தனர். இதை தொடர்ந்து வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாக பேரவையில் விளக்கம் அளித்தார். முதல்வரின் விளக்கம் திருப்தி அளிக்க வில்லை என கூறி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பேரவையில் வெளிநடப்பு செய்தனர்.