சென்னை, பிப்.17:  தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் மறுத்துவிட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூலை 23- ம் தேதி நடத்தப்பட்ட தேர்தலை செல்லாது என அறிவித்த சென்னை உயர்நீதிமன்றம், 3 மாத காலத்திற்குள் மறு தேர்தலை நடத்தி முடிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாசை நியமித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தலைமையிலான டிவிசன் பெஞ்சில், அப்பீல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதையேற்க டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

பின்னர், நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தேர்தல் அதிகாரி தொடரலாம். ஆனால், உயர்நீதிமன்ற ஒப்புதலின்றி தேர்தல் அறிவிப்பாணையை, தேர்தல் அதிகாரி வெளியிடக்கூடாது. சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டதை உறுதி செய்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த அப்பீல் மனுவையும் இவ்வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். பின்னர், அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை வரும் 20- ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.