புதுடெல்லி, பிப்.18: காங்கிரஸ் கட்சிக்கு வலுவூட்டும் வகையில் பிரியங்காவை சத்தீஸ்கரில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

டெல்லி சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலும், இளம் தலைமுறையினரை கொண்டு வர, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

இதன்படி, பிரியங்காவை, ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில், சத்தீஸ்கரிலிருந்து தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அதேபோல், 2019 லோக்சபா தேர்தலில், குணா தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த ஜோதிராதித்யா சிந்தியாவும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, மிலிந்த் தியோரா மற்றும் ராஜிவ் சதவ் ஆகியோரும் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்ட வாய்ப்பிருக்கிறது.

ராஜ்யசபாவின் தற்போதைய காங்கிரஸ் உறுப்பினர்களான மோதிலால் வோரா, அம்பிகா சோனி, குலாம்நபி ஆசாத் ஆகியோரின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைய இருக்கிறது. இவர்களில் குலாம் நபி ஆசாத் மட்டும், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மீண்டும் தேர்வு செய்யப்படுவார்.

இதனிடையே காங்கிரஸ் காரிய கமிட்டி விரைவில் டெல்லியில் கூட இருக்கிறது. இதில் டெல்லி தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் பதவியை ஏற்க ராகுல் மறுத்துவிட்டதை தொடர்ந்து சோனியா தற்காலிகமாக தலைவர் பதவியை ஏற்றுள்ளார். கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாததால் தேர்தலில் தோல்வி ஏற்பட்டு வருவதாக ஒரு சாரார் கருதுகின்றனர். எனவே ராகுல் சம்மதிக்காவிட்டால் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவும் முயற்சி நடைபெற்று வருகிறது.