அம்பத்தூர், பிப்.18: ஆவடி அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த இளம் பெண் 2 கைக்குழந்தைகளுடன் ரெயில்முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சேக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது28) இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.

வேப்பம்பட்டு பகுதியைச்சேர்ந்த நாதமுனி, காஞ்சனா தம்பதியின் மகள் விஜயலட்சுமி (வயது22. இவர் ஆவடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் போது முத்துக்குமாருக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம்செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சேக்காடு பகுதியில் முத்துக்குமார் அவரது தாய், தம்பி மற்றும் மனைவியுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். விஜயலட்சுமிக்கு 2 வயதில் கவிசேரன் என்ற மகனும், 2 மாதமே ஆன நிஸ்வந்த் என்ற மகனும் இருந்தனர். முத்துக்குமாருக்கும் விஜய லட்சுமிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை தாய் காஞ்சனாவுக்கு விஜயலட்சுமி போன் செய்து பேசிகொண்டு இருந்த போது போன் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையறிந்த விஜயலட்சுமியின் தந்தை நாதமுனி இன்று காலை மகள் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் மகள் இல்லாததால் அதிர்ச்சி அடைந்து விஜயலட்சுமியின் மாமியாரிடம் கேட்ட போது அவர் பேசவில்லையாம். இதுகுறித்து மகளை காணாமல் துடித்த நாதமுனி ஆவடி போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த நிலையில் ஆவடி அடுத்த இந்துகல்லூரி ரெயில் நிலையம் அருகே இளம் பெண் 2 குழந்தைகளுடன் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ரெயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சென்று பார்த்த போது முத்துகுமாரின் மனைவி இரண்டு கைக்குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய் மற்றும் குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் குடும்ப தகராறில் விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா என்று பல கோணங்களில் வழக்குப்பதிவு செய்து அவரது கணவர் முத்துக் குமாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 குழந்தைகளுடன் ரெயில் முன் விழுந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.