சென்னை, பிப்.19: உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான, டெண்டர் முறைகேடு தொடர்பான புகாரில் முகாந்திரம் இல்லை; அதனால், அவர் மீதான வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து,
சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக்கோரி, அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம். சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் கொண்ட பெஞ்ச் பிறப்பித்த உத்தரவின்படி, முறைகேடு புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்திருந்தது.

இதற்கிடையில், இதுதொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லாததால் வழக்கை முடித்து வைக்கக்கோரி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து, சிறப்பு குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையில், புகாரில் கூறப்பட்ட குற்றச் சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆகையால், அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.