சென்னை, பிப்.19: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பான நல்ல அறிவிப்பு விரைவில் வரும் என சட்டபேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் எதிர்கட்சி தலைவர் பேச சபாநாயகர் அனுமதி அளித்தார். அதை தொடர்ந்து அவையின் கவனத்தை ஈர்த்து ஸ்டாலின் பேசியதாவது: காவேரி சிறப்பு வேளாண் மண்டலமாக கடந்த 9-ம் தேதி முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பில் புதிதாக இனி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என குறிப்பிட்டார். ஆனால் இதற்கு முன்பு அனுமதி அளித்த ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அறிவிக்கவில்லை.

அதே போன்று முதல்வர் அறிவித்தது தொடர்பான கடிதத்தை மத்திய அமைச்சர்களை சந்தித்து கடந்த 10-ம் தேதி அமைச்சர் ஜெயக்குமார் அளித்துள்ளார். இந்த கடிதத்தில் கூட இதற்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை, மக்களவையில் திமுக எம்பிக்கள் எழுப்பி உள்ளனர். ஆகவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தொடர்பாக சட்டமுன் வடிவை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: சேலத்தில் நடைபெற்ற விழாவில் கடந்த 9-ம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டேன். டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றும், வேளான் மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர் கோரிக்கையை ஏற்று தலைவாசல் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண் மண்டலம் அமைக்கப்படும் என்று அறிவித்தேன். இதற்கான நல்ல அறிவிப்பு விரைவில் வரும். என்றார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக சட்ட முன் வடிவு கொண்டு வர வேண்டும். இன்னும் 2 நாட்கள் மட்டுமே சட்டசபை உள்ளது. இன்று மாலை கூட அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வருகிறது. ஆகவே முதல்வர் நேற்று ஆவேசமாக கூறியது போல மாநிலங்களவையிலும், மக்களவையிலும் திமுக உறுப்பினர்க தொடர்ந்து வலியுறுத்தி பேசுவார்கள் என உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி: இந்த அறிவிப்பு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் வேளாண் மக்களுக்காக நல்ல செய்தி வரும். விரைவில் எதிர்க்கட்சி தலைவர் கேட்டது போல விரைவில் நல்ல முடிவு வரும். இவ்வாறு முதல்வர் பதிலளித்தார்.