வெலிங்டன், பிப்.20:  ஐசிசி நடத்தும் டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை விளையாடிய 7 ஆட்டத்திலும் அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, நாளை தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்ஆட்டம் வெலிங்டன் நகரில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இந்தத் டெஸ்ட் தொடரானது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தோல்வியை சந்திக்காமல் வலம் வருகிறது. இதுவரை 3 டெஸ்ட் தொடர்களை முழுமையாக வென்று 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. ஐசிசி உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப்பில் ஒரு அணி 6 தொடர்களை விளையாட வேண்டும். அந்த வகையில், இந்திய அணிக்கு நியூசிலாந்துடன் மேலும் இரு தொடர்கள் எஞ்சியுள்ளது. கடைசி இரு தொடர்களிலும் இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை சந்திக்கிறது. இந்திய அணி இதுவரை வெஸ்ட் இண்டீஸ் (2-0), தென்னாப்பிரிக்கா (3-0), வங்கதேசம் (2-0) ஆகிய அணிகளை வீழ்த்தியுள்ளது.

இந்தியா அணிக்கு பலப்பரீட்சை:
ஏற்கனவே, இந்திய அணிக்கு தண்ணீகாட்டிவரும் நியூசிலாந்து அணி, தனது சொந்த மண்ணில் களமிறங்கும் டெஸ்ட் தொடர் என்பதால், நாளைய போட்டி விராட் கோலி படைக்கு கடும் சவாலாகவே இருக்கும். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியின் திறன் தற்போதுதான் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.

பேட்ஸ்மேன்களுக்கு சவாலளிக்கும் ஆடுகளம்:
வெலிங்டன் ஆடுகளம் பவுன்ஸருக்கு நன்கு ஒத்துழைக்கும். மேலும் காற்று வீசும் சூழலில் பந்துகள் நன்கு ஸ்விங் ஆகும் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்களின் திறன் கடும் சோதனைக்கு உள்ளாகக்கூடும்.

விராட் படை வெல்லுமா?
நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்பது இது 3வது முறை. எனவே, 3-வது முறையாக நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதில் இந்திய அணி தீவிரம் காட்டக்கூடும். கடந்த 1968-ம் ஆண்டு எம்.ஏ.கே. பட்டோடி தலைமையிலும், 2009-ம் ஆண்டு எம்.எஸ்.தோனி தலைமையிலும் நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது, பாராட்டுதலுக்குரியது.