புதுடெல்லி, பிப்.21: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி நடத்தும் பேச்சு வார்த்தையை தொடர்ந்து இருநாடுகளிடையே வர்த்தகம், சொத்துரிமை மற்றும் தீவிரவாத ஒழிப்பு தொடர்பாக 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என மத்திய வெளியுறவுத்துறை அதிகாரி கூறி உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வருகிற 24-ந்தேதி டெல்லி வருகிறார். அவருடன் அவரது மனைவி மெலனியா மற்றும் உயர்மட்ட குழுவினர் வருகிறார்கள். புதுடெல்லி மற்றும் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு செல்கிறார். டெல்லி- அகமதாபாத்தில் டிரம்ப்பை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலைகள் மற்றும் தெருக்கள் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. அவர் பிரதமர் மோடியுடன் இணைந்து பொது கூட்டம் ஒன்றில் நாட்டு மக்கள் முன் உரையாற்றுகிறார்.

டிரம்ப்பின் இந்திய பயணத்தின் போது இந்தியா-அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. டொனால்டு டிரம்ப் 25-ம் தேதி பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்த நிலையில் டிரம்ப்பின் வருகையையொட்டி 5 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது தொடர்பாக டிரம்ப்புடன் வருகை தரும் அமெரிக்காவின் வர்த்தகக் குழுவினருடன் வெளியுறவு அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இது குறித்து நிருபர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் அறிவுசார் சொத்துரிமை, வர்த்தகம், உள்நாட்டு பாதுகாப்பு உள்பட 5 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.