வெலிங்டன், பிப்.22: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 165 ரன்களிலேயே சுருண்டு மோசமான நிலையில் உள்ளது. இன்றைய 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நேற்று முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. முதல் நாளிலேயே மோசமாக பேட்டிங் செய்து 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 122 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்திருந்த நிலையில், மழையின் குறுக்கீடு காரணமாக ஆட்டம் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த ரஹானேவும் அரைசதம் கூட எட்டாமல், 46 ரன்களில் அவுட்டாக, அடுத்தடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன்மூலம், 68.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இந்திய அணியால் 165 ரன்களை மட்டுமே சேர்க்கமுடிந்தது.

பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்கவீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பினாலும், கேப்டன் வில்லியம்ஸன் பொறுப்புடன் விளையாடி 89 ரன்கள் எடுத்தார், ராஸ் டெய்லர் 44 ரன்களில் ஆட்டமிழக்க, இன்றைய ஆட்டநேரமுடிவில் நியூசிலாந்து அணி 71.1 ஓவரில் 5 விக்கெட்டு இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம், நியூசிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலையில் உள்ளது.