சென்னை, பிப்.24:

வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்களை குறிவைத்து, பெண் குரலில் நயவஞ்சமாக செயல்பட்டு, கிட்டத்தட்ட 350 பேரிடம் நூதன முறையில் ரூ.80 லட்சம் வரை பணம்பறித்த இன்ஜினியரிங் பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரவாயலை சேர்ந்த உதயராஜ் என்பவர் கடந்த 16-ம் தேதி ‘லோகேன்டோ’ என்னும் செல்போன் ஆப்பை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து வேலைவாய்ப்பு தேடிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, ஸ்கீரினில் பாலியல் தொடர்பான விளம்பரம் வந்த அடுத்த கணமே அவரது செல்போனிற்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பிரியா என்பவர் பேசி பாலியல் தொடர்பான படங்கள், வீடியோக்களை அனுப்பிவைக்க தயாராக உள்ளதாகவும், அதற்காக குறிப்பிட்ட தொகையை அனுப்பிவைக்கவேண்டும் என்று செக்ஸியாக பேசியதாக தெரிகிறது.

இதனை நம்பி, உதயராஜூம் பணம் அனுப்பிவைத்துள்ளார். அடுத்த நிமிடமே, ஆபாசப்படம் கேட்டு பணம் தன்னை மிரட்டுவதாக போலீசில் புகார் அளித்துவிடுவேன் என்றும், புகார் அளிக்காமல் இருக்க மேற்கொண்டு பணம் தரவேண்டும் என்றும் அந்த செல்போன் எண்ணில் இருந்து உதயராஜூக்கு மெசேஜ் வந்துள்ளது.

இது பணம் பறிப்பு கும்பல் என்பதை சூதாரித்து கொண்ட உதயராஜ், மயிலாப்பூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ‘கூகுல்பே’ மூலம் உதயராஜ் பணம் அனுப்பிவைத்த எண்ணை கண்காணித்ததில், இந்த மோசடியில் ஈடுபட்டது திருநெல்வேலி மாவட்டம் பணக்குடியை சேர்ந்தவர் வளன் ராஜ்குமார் ரீகன் (வயது 27) என்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரீகனை கையும் களவுமாக இன்று கைது செய்தனர். பொறியியல் பட்டதாரி இளைஞரான ரீகன், ‘லோகேன்டோ’ என்னும் செல்போன் ஆப் மூலம் வேலைதேடும் இளைஞர்களை குறிவைத்து, பெண் குரலில் செக்ஸியாக பேசி அவர்களிடம் நூதன முறையில் பணம்பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 2017-ம் ஆண்டுமுதல் ரீகன் இத்தகைய நூதன மோசடியை அரங்கேற்றி, இதுவரை 350 இளைஞர்களை ஏமாற்றி, ரூ.80 லட்சம் வரை பணம்பறித்துள்ள அதிர்ச்சி தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரீகனிடம் போலீசார் தொடர்ச்சியாக விசாரணை நடத்திவருகின்றனர்.