சென்னை, பிப்.24:

திருநின்றவூர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களிடம் செல்போன் பறிப்பு திருடர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொருவரை தேடிவருகின்றனர்.

திருநின்றவூர் பகுதியில் போலீசார் நேற்றிரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியாக பைக்குகளில் வந்த சந்தேகத்திற்கிடமான 5 பேரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், ரியாஸ் (வயது 19), மணிகண்டன் (வயது 19), சதீஷ் (வயது 19), அஜித் (வயது 22) மற்றும் மற்றொரு மண்கண்டன் (வயது 21) என்பதும், செல்போன் கொள்ளையர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 3 பைக்குகள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், நுங்கம்பாக்கத்தில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட முயன்ற மர்மநபர்களில் ஒருவரை பொதுமக்கள் மடக்கிபிடித்து தேனாம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். கைதானவர், பாலாஜி என்பது தெரியவந்தது. இவரிடமிருந்து 18 செல்போன்கள் பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய கார்த்திக் என்பவரை தேடிவருகின்றனர்.