சென்னை, பிப்.24: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த தினவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை அக்கட்சி தொண்டர்கள் கோலகாலமாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். வீதிக்கு வீதி ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். மேலும் அன்னதானம், நலத்திட்ட உதவிகளை அதிமுகவினர் ஏழை எளியோருக்கு வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் ஜெயலலிதாவின் உருவ சிலை மலர்களால் அலங்கராம் செய்யப்பட்டு இருந்தது. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்கள். அமைச்சர்களும் மலர் தூவினார்கள்.

அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இனிப்புகளை இருவரும் இணைந்து வழங்கினார்கள். அப்போது இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் சாதனைகளை பறைசாற்றும் புத்தகத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டனர். இதன் பின்னர் அதிமுக அலுவலகத்தின் மாடியில் நடைபெற்ற விழாவில் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 109 பேருக்கு நலத்திட்ட உதவிகளும், நலிந்தோருக்கான நிதி உதவி 14 பேருக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

அதன்பிறகு தலைமைக் கழகத்தில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் ஏற்பாட்டில் 72 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ‘கேக்’ வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கினர். அதன் பின்னர் இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி ஜெயலலிதா பிறந்தநாளையாட்டி அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதனை முதல்வரும், துணை முதல்வரும் இணைந்து தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாம் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார். இந்த மருத்துவமுகாமில் இருதய நோய் பரிசோதனை, கண்மருத்துவம், பொதுமருத்துவம் சிகிச்சை அளிக்கப்பட்டு, இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், எம்.சி. சம்பத், ஆர்.காமராஜ், கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ, மா.பா. பாண்டியராஜன், பெஞ்சமின், தலைமை கழக நிர்வாகிகள் பொன்னையன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, தமிழ்மகன் உசேன், தம்பிதுரை, நத்தம் விசுவநாதன், கமலக்கண்ணன், மாவட்ட கழக செயலாளர்கள் ஆர்.எஸ்.ராஜேஷ் விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, வெங்கடேஷ் பாபு, சிட்லபாக்கம் ராஜேந்திரன்,
அலெக்சாண்டர், வாலாஜா பாத் கணேசன், மயிலை ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட ஏராளமான தாண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதில் விருகை பகுதி செயலாளர் கே.மலைராஜன், முன்னாள் வட்ட செயலாளர் வழக்கறிஞர் பொன்னி ப.தர்மராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ஸ்டார் குணசேகரன், ஜி.ஜெயந்தி, ஆயிரம் விளக்கு பகுதி துணை செயலாளர் ஸ்டெர்லிங் ஜார்ஜ், ஆயிரம் விளக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் ஆர். சதாசிவம், இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், துணை செயலாளர்கள் கே.எஸ் மலர் மன்னன், இ.சி. சேகர், முன்னாள் கவுன்சிலர் ஆ.பழனி, ஜிம்கிளி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.