சென்னை, பிப்.25: டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த மாதம் 7-ம் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விவசாய நிலங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்தனர்.

விவசாயிகளின் இந்த கோரிக்கைகளுக்கு செவி சாய்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

அவருடைய இந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தமிழக சட்டசபையில் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் சிறப்பு மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா சட்டசபையில் நிறைவேறியதை தொடர்ந்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.

இது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விவசாயிகள் நேரில் சந்தித்து தங்கள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர். குறிப்பாக நீண்ட காலம் போராடி வந்த நெடுவாசல் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு முதல்வரை நேரில் சந்தித்து தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்ததுடன், முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தங்கள் கோரிக்கையை ஏற்று செயல் வடிவம் கொடுத்த முதல்வருக்கு அடுத்த மாதம் 7-ம் தேதி திருவாரூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை சட்டப்பூர்வ நடவடிக்கைகளால் நிலை நாட்டிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்தியதைப் போன்று தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.