தூத்துக்குடி, பிப்.25: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என்று விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் கூறினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் 15 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த ரஜினிகாந்திடம் விசாரணை நடத்துவதற்காக 25-ம் தேதி ஆஜராகுமாறு நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவரது சார்பில் விசாரணை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி இன்று காலை நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் முன் ஆஜராகி ரஜினிகாந்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து வழக்கறிஞர் இளம்பாரதி கூறுகையில், நடிகர் ரஜினிகாந்த்துக்கு கேட்கப்படும் கேள்விகள் அடங்கிய பேப்பரை ஒரு கவரில் வைத்து
சீல் வைத்தபடி ஆனையம் வழங்கி உள்ளது என்றார்.

இதனிடையே விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் கூறுகையில் ரஜினிகாந்த் நேரில் ஆஜராவதற்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என்றார்.