மெல்போர்ன், பிப்.29: உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வீழ்த்தி, இந்திய அணி தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் 14-வது ஆட்டம் மெல்போர்னில் இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கை மகளிர் அணியில் அதிகபட்சமாக, கேப்டன் சமாரி அத்தபத்து 33 ரன்களும், கவிஷா தில்லாரி 25 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக, வீராங்கனை ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர், எளிய இலக்கை விரட்டியபடி களமிறங்கிய இந்திய அணியில் நட்சத்திர வீராங்கனையும், தொடக்கவீராங்கனையுமான ஷபாலி வெர்மா முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டி, தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். 34 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகள் உட்பட 47 ரன்களில் ரன் அவுட்டானார். 3 ரன்களில் அரைசதத்தை தவறவிட்டாலும், அணியின் ஸ்கோர் உயர முக்கிய பங்காற்றினார்.

காயத்திலிருந்து மீண்டு வந்த அனுபவ வீராங்கனை மந்தனா உட்பட அடுத்தடுத்து களமிறங்கயி வீராங்கனைகள் தங்கள் பங்கிற்கு ரன்களை சேர்க்க. 14.4 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் விட்டுகொடுத்து, இந்திய அணி இலக்கை எட்டியது.

இதன்மூலம், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
ஏற்கெனவே நடைபெற்ற 3 லீக் ஆட்டங்களில் நடப்புச்சாம்பியன் ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட இந்திய மகளிர் அணிக்கு இது சம்பிரதாய போட்டியானாலும், இலங்கையை அணியை சுலபமாக துவம்சம் செய்து, தான் இடம்பெற்றுள்ள ஏ பிரிவு புள்ளிப்பட்டியலில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது, பாராட்டுதலுக்குரியது.