கிறிஸ்ட் சர்ச், மார்ச் 2:  2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது.

இந்தியா-நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி முதல் பேட்டிங் செய்தது. தொடக்கவீரர் பிருத்வி ஷா, புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோரின் அரைசதத்தால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 242 ரன்கள் சேர்த்தது. பின்னர், முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 235 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது.

பின்னர், தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 124 ரன்களிலேயே சுருண்டது. ஒருவர் கூட 30 ரன்களை கடக்கவில்லை. பின்னர், தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே விட்டுக்கொடுத்து 132 ரன்கள் எடுத்த இலக்கை எட்டியது. இதன்மூலம், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. மேலும், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது. போட்டியின் ஆட்டநாயகன் விருது கெய்ல் ஜெமிசனுக்கும், தொடர் நாயகன் விருது டிம் சவுதிக்கும் வழங்கப்பட்டது.