மேல்மருவத்தூர், மார்ச் 2: மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 2623 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள மக்கள் நலப்பணிப் பொருட்களை பங்காரு அடிகளார் வழங்கினார்.

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் 80-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆன்மிக இயக்கம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் கலவை மற்றும் மேல்மருவத்தூரில் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி மருத்துவமனை வளாகத்தில் பிப்.9-ம் தேதி 80 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்து வைக்கப்பட்டது. கலவையில் ஆதிபராசக்தி குழுமக் கல்வி நிறுவன வளாகத்தில் 20-ம் தேதி நடைபெற்ற முத்து விழாவில் 80 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பிப்.26-ம் தேதி சதாபிஷேக திருக்கல்யாணம் மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் சிறப்பாக நடந்தேறியது.

இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு துவங்கிய சிறப்பு மேடை நிகழ்ச்சியில் 2633 பயனாளிகளுக்கு ரூ.2கோடியே 25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் வழங்கினார். அதனைத் தொடர்ந்து விழா மேடையில் மலர் வெளியிடப்பட்டது. அடிகளாரின் பிறந்தநாளை யொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏற்றப்பட்டு கொண்டு வரப்பட்ட ஆன்மிக ஜோதிகளுக்கு 29-ம் தேதி மாலை 4.00 மணிக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் கோ.ப.செந்தில் குமார் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து கலச விளக்கு, வேள்வி பூசையை அவர் துவக்கி வைக்க, இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் வேள்வியில் பங்கேற்றனர்.
விழாவை முன்னிட்டு. நேற்று 1-ம் தேதி காலை 9 மணி அளவில் சேலம், நாமக்கல் மாவட்ட பக்தர்கள் அடிகளாரை அவரது இல்லத்திலிருந்து வெள்ளிரதத்தில் அமர்த்தி அழைத்து வந்தனர். சித்தர் பீடம் வருகை தந்த அடிகளாருக்கு பக்தர்கள் சிறப்பாக வரவேற்பளித்தனர். அதனைத் தொடர்ந்து அடிகளாருக்கு பாதபூசை நடைபெற்றது.மாலை 4.00 மணிக்கு இயக்க அரங்கில் மேடை நிகழ்ச்சிகள் ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் முன்னிலையில் துவங்கின.

விழாவில் முக்கிய விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி.கிருபாகரன், வருமான வரித்துறை ஆணையாளர் ரெங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.