புதுடெல்லி, மார்ச் 2: நிர்பயா வழக்கில் கடைசியாக பவன்குமார் குப்தா தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்ததை தொடர்ந்து நான்கு குற்றவாளிகளும் நாளை காலை 6 மணிக்கு திகார் சிறையில் தூக்கிலிடப்படுகிறார்கள்.
டெல்லியில் 2012-ல் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்ட மருத்து மாணவி நிர்பயா தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிங்கப்பூர் மருத்துவமனையில் அதே ஆண்டு டிசம்பர் 29-ல் உயிரிழந்தார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ராம்சிங் என்பவன் டெல்லி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டான். இன்னொருவன் சிறார் என்பதால் 3 ஆண்டு சிறைத்தண்டடைனக்கு பிறகு விடுவிக்கப்பட்டான். எஞ்சிய முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய நால்வருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

கடந்த ஜனவரி 22-ம் தேதி தூக்கிலிட தேதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து கருணை மனு மற்றும் சீராய்வு மனுக்களை குற்றவாளிகள் ஒவ்வொருவராக தாக்கல் செய்தனர்.
இதன் காரணமாக அவர்களது தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதி பிப்ரவரி 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, நான்கு பேரையும் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராணா உத்தரவிட்டார். இதற்கிடையே, நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குமார் உச்சநீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரி இருந்தார். அந்தவகையில் நிர்பயா வழக்கு குற்றவாளியான பவன் குமாரின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் மார்ச் 2ம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்து ‘இருந்தது.

இந்நிலையில் இன்று காலை நீதிபதி என்.வி ரமணா தலைமைல் அருண் மிஸ்ரா, ஆர்.எப். நாரிமன், ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோரை கொண்ட அமர்வு முன் இன்று பரிசீலனைக்கு வந்தது. மறு சீராய்வு மனுவை நீதிபதிகள் உடனடியாக தள்ளுபடி செய்தனர். வாய் மொழி விவாதத்துக்கு இடமில்லை என அறிவித்தனர். மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்றும் மார்ச் 3-ல் தூக்கிலிட தடை விதிக்க வேண்டும் என்றம் பவன் குமார் தரப்பில் கோரப்பட்டிருந்தததை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு உடனடியாக நிராகரித்து விட்டது. இதையடுத்து நான்கு பேரும் ஏற்கனவே விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு படி நாளை காலை 6 மணிக்கு திகார் சிறையில் தூக்கிலிடப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. ஒத்திகையும் பார்க்கப்பட்டு விட்டது. எனவே தூக்கிலிடப்படுவதற்கு இருந்த சட்ட நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்துவிட்டது.

பல் மருத்துவ மாணவி நிர்பயா காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கால தாமதம் செய்யப்படுவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.