புதுடெல்லி, மார்ச் 4: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று பிரதமர் மோடி டுவீட் செய்துள்ளார்.

ஆண்டுதோறும் ஹோலி பண்டிகை வட இந்தியாவிலே கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வரும் 10-ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி இந்த ஆண்டு அதில் தாம் கலந்துகொள்ள போவதில்லை என்று டுவீட் செய்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவும் என்பதால் மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியிருப்பதால் தாம் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை தவிர்ப்பதாக மோடி அந்த டுவிட்டர் செய்தியில் கூறியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில், இதுபோன்ற மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளால் கொரோனா வைரஸ் தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அதை தடுக்க பெரிய அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க உலகம் முழுவதும் உள்ள நிபுணர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதுவரை இந்தியாவில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லி, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 6 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.